Saturday 6 October 2012

செல்லாக் காசாக: 5 பைசாவுக்கு அக்காலத்தில் மிட்டாய் வாங்கினேன்..


நண்பர் சொல்கிறார் இன்னொரு நண்பரிடம்..உங்க பையனுக்கு உண்டியல் சேமிப்பு பழக்கம் கற்று தந்திருக்கிறீர்களா?ஆம் என்பதாய் அவர் பதில்..அப்படியாயின் உண்டியலை  உடைத்து 25 பைசாவை செலவழிக்கப் பாருங்கள்.25 பைசா ,ஜூன் 30 க்கு பின், செல்லாக் காசாக அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிறது.இதுதான் நண்பர் அந்த நண்பருக்களித்த அறிவுரை.அதைத் தொடர்ந்துதான் அந்தக் கால காசுகளைப் பற்றிய நினைவு அலசல்கள் பரபரப்பாய் பற்றிக் கொண்டது நண்பர்களிடம்..

ஒரு நண்பர் சொல்கிறார்..5 பைசாவுக்கு அக்காலத்தில் மிட்டாய் வாங்கினேன்..அப்பா பள்ளிக்கு செல்லும் போது பத்து பைசாவை என்னிடம் கொடுத்து நீயும்,தம்பியும் மிட்டாய் வாங்கி சாப்பிடுங்கள் என்பார்!அது ஒரு கனாக்காலம்…என்கிறார் பெருமூச்சோடு!
அடுத்தவர் ஆரம்பிக்கிறார்…அது பத்து பைசாவைப் பற்றிய நினைவு..நினைவிருக்கிறதா உங்களுக்கு ,சரியான வட்டமாக அல்லாமல் பூவின் இதழ் போன்ற வட்டத்தில் அக்கால பத்து பைசா..ரயில் தண்டவாளத்தில் நசுங்க வைத்து ரசித்திருக்கிறேன்.பைசாக்களை பால்பேப்பர் நோட்டில் வைத்து பென்சிலால் தேய்த்து அதன் அச்சு எடுத்திருக்கிறீர்களா..அதெல்லாம் அக்கால விளையாட்டு.மோதிரம் செய்த கதையும் உண்டு என்கிறது அவரின் நினைவலைகள்.
அடுத்தவர் வார்த்தையில் 20 பைசா நிழலாடுகிறது..20 பைசா பற்றி அவர் நினைவு படுத்துகையில் பலரின் நினைவுகளில் அதன் அமைப்பு மறந்து போயிருக்கிறது…அவர் இருபது பைசாவில் சேமியா ஐஸ் வாங்கிய சுவையான நினைவுகளை அசை போடுகிறார்.பைசாவில் h ,m , t தனி தனி காயின்களை ஒன்று சேர்த்து கொடுத்தால் hmt வாட்ச் தருவார்கள் என்று யாரோ கதை கட்டிகளின் கதைகளை ,அக்காலத்தில் நம்பி இருப்பதாகவும் வெம்பி சொல்கிறார்.பைசா வைத்து பைசா கோபுரம் கட்டிய கதையும் இடையில் வந்து போகிறது..
இப்படியாய் நீள்கிறது காணாமல் போன பழைய 50 பைசா,1 ரூபாய் நோட்டு,பளபள சின்ன பத்து பைசா நினைவுகள்,அதனை சுற்றிய கதைகள்..நான் குழந்தையாக இருந்தபோது,என் தாத்தா 1 பைசா,2 பைசா,1 /2 அனா  நினைவுகளைப் பற்றி சிலாகித்ததும் என் நினைவிலிருந்து மறையாமல் இன்னும் நிழலாடுகிறது.ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாட்டின் வளர்ச்சிக்கேற்ப,நாணயங்களின் மதிப்பிற்கேற்ப அவை மாறவே,மறையைவோ செய்கின்றன.அது காலத்தின் கட்டாயம்..இருந்தாலும்…அந்த பழைய பைசாக்களை பார்க்கும் போது  அது நம்மில் உண்டாக்கும் சிலிர்ப்பு மாறுவதில்லை.அக்கால காசுகள் இக்காலத்தில் செல்லாக் காசாகலாம்..ஆனால் அதனைப் பற்றிய நினைவுகள் நம்மிடத்தில் எப்போதும் செல்லாமல் போவதில்லை!!இனிமையான நினைவுகளை சேமித்துக் கொண்டே இருக்கின்றன!

No comments:

Post a Comment