Saturday 6 October 2012

பிரில் மை(Bril Ink) : பரீட்சை எழுதும் போது பேனாவில் மை தீர்ந்து விட்டால் உடனே


பிரில் மை(Bril Ink) : 

 இந்த படத்தில் காண்பதை எங்காவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா. பிரில் மை, நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, நமது படிப்பிற்கு இதன் பங்கு மிக முக்கியமானதாகும். பேனாக்களில் இந்த மையை ஊற்றி அதனை வைத்து எழுதும் போது, அந்த எழுத்துக்களின் அழகே அழகு. 
ஆனால் தற்காலத்தில், பந்து பேனா, அரைத்தின்மக் கரைசல் பேனா (ஜெல்), நுன்முனை பேனா போன்றவற்றின் படையெடுப்பால் இந்த பிரில் மையின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. எனக்கு தெரிந்து தற்போது இதனை பயன்படுத்துபவர்கள் யாரும் இல்லை என்று தான் நினைக்கிறேன். 
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அனைவரும் இதனை பயன்படுத்தினார்கள். அப்போது நான் படித்த பள்ளிக்கூடத்தில் பரீட்சை எழுத மை பேனா தான் உபயோகிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. பரீட்சை எழுத வரும் மாணவர்கள் அனைவரும் தங்களுடன் இரண்டு பேனாக்களை எடுத்துச் செல்வது வழக்கம். அந்த பேனாக்களுடன் ஒரு சிறிய குப்பியில் இந்த பிரில் மையை நிறைத்து உடன் வைத்திருப்பர். ஏனென்றால் பரீட்சை எழுதும் போது பேனாவில் மை தீர்ந்து விட்டால் உடனே இந்த சிறிய குப்பியில் இருந்து பேனாவில் மை நிறைத்து பரீட்சை எழுதி வந்தார்கள். இதனால் அவர்களுக்கு தடையில்லாமல் பரீட்சை எழுத முடிந்தது. நிப்பு ,கரிகாம்பு ,பில்லர் ..என்று மறக்க முடியாத அனுபவங்கள்அனைவருக்கும் உண்டு ..
அப்பொழுது மாணவர்கள் ஹீரோ பேனாக்களை கூடுதலாக பயன்படுத்தினர். அந்த பேனாவின் முனையை குப்பியில் வைத்து அதன் பிஸ்டனை அழுத்திவிட்டு திரும்ப விட்டு விட்டால், குப்பியில் உள்ள மை பேனாவில் வந்து விடும். மேலும் பரீட்சை எழுதிவிட்டு வரும் மாணவர்களின் கைகளில் இந்த பிரில் மையின் அடையாளம் மறக்க முடியாதது. பரீட்சை முடிந்து விட்டால் பேனாவின் மையை பிற மாணவர்களின் சட்டையில் உதறி விளையாடுவதும், அதனால் சட்டையில் வரும் அடையாளமும், வீட்டுக்கு சென்றவுடன் அந்த அடையாளத்தைப் பார்த்து அம்மா திட்டுவதும் இன்றும் மறக்க முடியாதவை.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, எனது பெஞ்சின் பின் பெஞ்சில் உள்ள ஒரு நண்பன் தனது பேனாவில் மை அடைக்கும் பொழுது தவறி எனது சட்டையில் பட்டுவிட்டது. இதனை பார்த்த எனது வகுப்பாசிரியர்  அந்த நண்பனை பிடித்து அடித்துவிட்டார். அந்த விஷயம் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.  

No comments:

Post a Comment