Saturday 13 October 2012

பஜாஜ் ஸ்கூட்டர்: இந்தியர்களின் வீடுகளை அலங்கரித்து வந்த செல்ல வாகனங்களில் ஒன்று பிரியாவிடை பெற்றுள்ளது.

இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்த வாகனங்களில் ஒன்றான ஸ்கூட்டர்களுக்கு விடை கொடுக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இனிமேல் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபடப் போவதில்லை என்று அது அறிவித்துள்ளது.

பஜாஜ் ஸ்கூட்டர்கள் இந்திய மக்களின் இல்லங்களுக்குப் பெருமை சேர்த்த வாகனங்களில் ஒன்று. ஸ்கூட்டர் என்றாலே பஜாஜ் என்று கூறும் அளவுக்கு மிகச் சிறந்த இடத்தில் இருந்தது பஜாஜ் ஸ்கூட்டர்.
ஆனால் தற்போது ஸ்கூட்டர் தயாரிப்பையே ஒட்டுமொத்தமாக நிறுத்து விட்டது பஜாஜ். இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் வெளியிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு தனது பஜாஜ் சேடக் பிராண்ட் ஸ்கூட்டர் தயாரிப்பை நிறுத்தியது பஜாஜ் நிறுவனம். இது ஒரு காலத்தில் உலகிலேயே அதிக அளவில் விற்பனையான ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் திகழ்ந்ததாகும்.
பின்னர் கிறிஸ்டல் என்ற பெயரில் ஸ்கூட்டர் ஒன்றை அறிவித்தது. ஆனால் இது வெளிவரவே இல்லை. இப்போது மொத்தமாக ஸ்கூட்டர் தயாரிப்புக்கே குட் பை கூறி விட்டது பஜாஜ்.
ஸ்கூட்டர்களுக்குப் பதில் மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக கவனம் செலுத்தப் போவதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய நடுத்தர வர்க்க இந்தியாவின் பிரியமான வாகனம் மோட்டார் சைக்கிள்தான். எனவே அதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக பஜாஜ் கூறியுள்ளது.
ஹீரோ ஹோண்டாவின் வருகையால்தான் ஸ்கூட்டர்கள் மீதான இந்தியர்களின் மோகம் குறைந்து போக முக்கியக் காரணம் என்று கூறலாம்.
எப்படியோ இந்தியர்களின் வீடுகளை அலங்கரித்து வந்த செல்ல வாகனங்களில் ஒன்று பிரியாவிடை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment