Saturday 13 October 2012

கூட்டாஞ்சோறு: சிறிய கரண்டியால் கூட்டாஞ்சோறு எல்லோருக்கும் பரிமாறப்படும். பால் பேதமின்றி எல்லாக் குழந்தைகளும் கூடிச்சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் உணவு


கூட்டாஞ்சோறு என்பது குழந்தைகள் வட்டாரத்தில் புழங்கும் முக்கியமான சொல் ஆகும். சிறுவர், சிறுமியர் சேர்ந்து விளையாடும்போது கூட்டாகச் சேர்ந்து சோறு ஆக்கிச் சாப்பிடுதல் என்பது உற்சாகமான விஷயம். குழந்தைகள் ஒவ்வொருவரும், அவரவர் வீட்டிற்குச் சென்று, அம்மாவுக்குத் தெரியாமல், அரிசி, வெல்லம், பருப்பு போன்ற பொருட்களை எடுத்து வருவார்கள். சில சமயம் வீட்டை விட்டு வெளியேறும் போது, பெரியவர்கள் பார்த்தால் திட்டு, உதை விழும். ஓரளவு வளர்ந்த பெரிய பெண் பிள்ளைகள் தான் மூன்று கற்களைக் கட்டிவைத்து, அதன்மேல் மண்சட்டியை வைத்து, அடுப்பில் நெருப்பை எரிக்க விறகு, சுள்ளி பொறுக்கிக் கொண்டு வருவார்கள். பெரும்பாலும் சோற்றை ஆக்கி, அதில் வெல்லம் அல்லது சர்க்கரையைக் கொட்டிக் கிண்டிச் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பார்கள் சிலவேளை அருகிலிருக்கும் திருமணமான இளம்பெண்கள் உணவு சமைப்பது எப்படி? பதம் பார்ப்பது எப்படி என்று ஆலோசனை வழங்குவார்கள். குழந்தைகள் கல்யாணமுருங்கை மரத்தின் இலையைப் போட்டு முன்னே உட்கார்ந்து கொள்ள, சிறிய கரண்டியால் கூட்டாஞ்சோறு எல்லோருக்கும் பரிமாறப்படும். பால் பேதமின்றி எல்லாக் குழந்தைகளும் கூடிச்சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் உணவு என்பது குழந்தைகளைப் பொறுத்தவரையில் அமுதம் தான்.
பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘வெடி தேங்காய்’ அருமையான உணவாகும். பெரிய தேங்காயின் மேற்பகுதியிலுள்ள கண்ணைத் திறந்து, நீரைக் குடித்துக் காலி செய்து கொள்ள வேண்டும். பொட்டுக் கடலை, வெல்லம் இரண்டையும் அம்மியில் வைத்து நசுக்கிய தூளை, தேங்காய்க்குள் திணித்து, ஓட்டையை வெல்லக் கட்டியினால் மூடிவிடுவார்கள். ஓலையைப் போட்டுத் தீயை மூட்டித் தேங்காயை அதனுள் இட்டுச் சுடுவார்கள். சூடேறிய தேங்காய் ஓடு சத்தத்துடன் வெடிக்கும். தீயை அணைத்து விட்டுத் தேங்காயை வெளியே எடுத்து, ஆற வைத்த பின்னர், எஞ்சியிருக்கும் சிரட்டையை நீக்கினால், வெல்லத்துடன் சேர்ந்து சூடான தேங்காய் மணக்கும்; சாப்பிடச் சுவையாக இருக்கும். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வெடி தேங்காயைச் சாப்பிடுவார்கள். இந்தச் செயலைத் தனி ஒரு ஆளாகச் செய்தால் அவ்வளவு சுவராசியம் இருக்காது. ஒத்த வயதுடைய சிறுவர்கள் சேர்ந்து வெடிதேங்காய் தயாரிக்கும்போது ஏற்படும் அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தின்பண்டம் என்றாலும், அதைத் தயாரிக்கப் பலர் கூட்டாகச் சேர்ந்து முயலுவது, எல்லோருரிடம் உற்சாகத்தைத் தரும் விஷயமாகிறது.

No comments:

Post a Comment